திருமுல்லைவாயலுக்கு ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடைகள் வருகை!

திருமுல்லைவாயல்:

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி, சென்னை இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் புனிதத் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவாரி திருப்பதி திருக்குடைகள் திருமுல்லைவாயல் பகுதிக்கு வந்தடைந்தன. திருக்குடைகளின் வருகையை அறிந்து அப்பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி முழக்கங்களுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

சிறப்புப் பூஜைகளுடன் திருமுல்லைவாயல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட திருக்குடைகளுக்கு, பொதுமக்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் பூத்தூவி, தேங்காய் உடைத்து கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் எழுப்பிய “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.

பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தடையின்றி திருக்குடைகளை தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், திருக்குடை ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் ஆவடி விக்டரி ஜெயக்குமார் தலைமையில் சுமார் 3,000 பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ள புனிதத் திருக்குடைகள் திருமுல்லைவாயல் பகுதிக்கு வந்தடைந்ததையொட்டி, அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. திருக்குடைகளின் வருகை திருமுல்லைவாயல் பகுதியையே ஆன்மிக மயமாக்கியது.

Leave a Reply