3 கி.மீ பயணம்… ஆயிரக்கணக்கான மக்கள் அவதி! திருநின்றவூர் சுகாதார நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல்வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைக்காக வந்து செல்வதாக கூறப்படுகிறது. முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த மருத்துவ நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சித்தா, ஆயுர்வேதம், அலோபதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர்.

பாக்கம், புலியூர், மேல்பாக்கம், ஆலத்தூர், பாலவேடு, நடுக்குத்தகை, முருகேஷ் நகர், லட்சுமிபுரம், பெரியார் நகர், கன்னிகாபுரம், கோமதிபுரம், பாபு நகர், பெரிய காலனி, சரஸ்வதி நகர், இந்திரா நகர், என்.எஸ்.கே. நகர், பொன்னியம்பேடு, கொட்டமேடு, புதுச்சத்திரம், மேட்டுக்கண்டிகை, கூடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுகாதார நிலையம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும், சுகாதார நிலையம் அருகே பேருந்துகள் நின்று செல்வதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மருத்துவ சிகிச்சைக்காக வரும் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் பேருந்தில் இருந்து இறங்கி நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால், சுகாதார நிலையம் அருகே வேகத்தடை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply