தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல் மின் நிலையம்! – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகையில், தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மொத்த நிறுவு திறன் 1,050 மெகாவாட் ஆகும். இந்த அலகுகள் 1979ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் அனைத்து நேரங்களிலும் சமமாக கிடைப்பதில்லை. எனவே, அதிக மின் தேவை ஏற்படும் காலங்களில் தடையற்ற மின்சாரத்தை வழங்க அனல் மின் உற்பத்திக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.

இதனுடன், மாநிலத்தின் மின் தொடரமைப்பை மேம்படுத்த ரூ.33,066 கோடி மதிப்பிலான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் சுமார் 15,000 கி.மீ. நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

புதிய அனல் மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தென் மாவட்டங்களின் எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply