புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு..! நீர்வழிப்பாதை, பனை மரங்கள் அழிப்பு என புகார்.

கிருஷ்ணகிரி:

போச்சம்பள்ளி அருகே தொப்படிகுப்பம் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைக்கப்படுவதாகவும், அதற்காக நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டு பனை மற்றும் தென்னை மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறி, கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

போச்சம்பள்ளி வட்டம் தொப்படிகுப்பம் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே நான்கு கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய கல்குவாரி அமைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான அனுமதி கிடைப்பதற்கு முன்பே பாறைகள் உடைக்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், குவாரிக்கு செல்லும் பாதை அமைப்பதற்காக, மழைக்காலங்களில் சக்கலிதுரத்து மலையிலிருந்து வரும் தண்ணீர் செல்லும் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அந்த பகுதியில் இருந்த பனை மற்றும் தென்னை மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, கால்வாயில் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், 15 அடிக்கு மேல் மண் தோண்டப்பட்டதால் தண்ணீர் ஊற்று ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உள்ள கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் கிராம மக்கள், புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு மற்றும் மரங்கள் அகற்றப்பட்டதாக ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, புதிய கல்குவாரி அமைக்கும் பணிகளையும், கல் உடைக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளையும் உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply