ரூ.1.80 கோடி எரிவாயு தகன மேடைப் பணி முதல் சுகாதார ஆய்வு வரை! திருப்பத்தூர் ஆட்சியர் நேரில் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமானப் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என்றும், காய்ச்சல் பரவலைத் தடுக்க சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ரூ.1.80 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை
கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செலந்தம்பள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2025–2026 நிதியாண்டில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அங்கு ஈமச்சடங்கு அறை, எரிவாயு சேமிப்பு அறை, ஜெனரேட்டர் அறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், கட்டுமானப் பணிகளின் தரத்தையும் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவச் சேவைகள் ஆய்வு
தொடர்ந்து, கந்திலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய்ப் பிரிவு, கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனை மற்றும் பிரசவ வசதிகள் உள்ளிட்ட மருத்துவச் சேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காய்ச்சல் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது, திறந்த நிலையில் இருந்த உரல் ஒன்றில் தண்ணீர் தேங்கியிருப்பதை மாவட்ட ஆட்சியர் கண்டறிந்தார். உடனடியாக அதனை அகற்றி, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பழைய பாத்திரங்கள், தேவையற்ற பொருட்கள் மற்றும் உரல்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ரூ.9.50 லட்சத்தில் சமுதாயக் கழிவுநீர் சேகரிப்புக் குளம்
தொடர்ந்து, கந்திலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சமுதாயக் கழிவுநீர் சேகரிப்புக் குளம் அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேசன், உதவிப் பொறியாளர் சரவணன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்