திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் – ஓசூர் விஎச்பி குரூப்ஸ் சார்பில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்று வரும் மாதாந்திர நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநல காப்பகத்தில் நடைபெற்றது. இது 312-வது மாத நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியாகும்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக ஓசூர் விஎச்பி குரூப்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விவேக் மூர்த்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்படி, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.650 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் என மொத்தம் ரூ.16,250 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், 125 நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கண்பார்வையற்றவர்கள் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 6 நபர்களுக்கு தலா ரூ.150 பராமரிப்பு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. போக்குவரத்து செலவுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
மேலும், ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பிலான டயாப்பர்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரயில்வே காண்ட்ராக்டர் ரவிச்சந்திரன் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கண்ணன், கலைச்செல்வி, பரிமளா, சிவகாமி, இனியா, விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் குணசுந்தரி நன்றி கூறினார்.
தமிழக வெற்றிக்குரல்