திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி! நவம்பர் 2-ம் தேதி தொடக்கம் – ஆட்சியர் வே. நல்லசிவன் அறிவிப்பு!

திருப்பத்தூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

01.01.2027-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே. நல்லசிவன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இப்பணிகள் தொடர்பாக அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளும் கோரப்பட்டன.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான கால அட்டவணை

இதன்படி, நவம்பர் 2-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. நவம்பர் 12-ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து, நவம்பர் 21, 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் டிசம்பர் 28-ஆம் தேதி வரை பரிசீலிக்கப்படும். இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தெரிவித்தார்.

அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply