ரஷ்யாவில் தங்கம் வென்ற திருப்பத்தூர் சிறுமி யாஷினி! சர்வதேச செஸ் போட்டியில் சாதனை!
திருப்பத்தூர்:
ரஷ்யாவில் நடைபெற்ற 20-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் – 2026 போட்டியில், திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை P. யாஷினி (P. Yakshini), 11 வயதுக்குட்பட்டோர் மகளிர் ரேபிட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த யாஷினி, போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
இதையடுத்து, இன்று (13.10.2026) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் N. திருப்பதி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் M. மனோகரன் ஆகியோர் யாஷினியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளர் V. நவீன்குமார், மத்திய நகரக் கழகச் செயலாளர் S. அச்சுதன், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த S. ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிறு வயதிலேயே சர்வதேச செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள யாஷினிக்கு, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் விளையாட்டு ஆர்வலர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இளம் வயதில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ள யாஷினி, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்