தமிழகத்தில் கிலோ ₹30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்! ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ வரை வழங்கப்படும்.

அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை – முதல் கட்டமாக 25,000 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை – அக்டோபர் 17:

தமிழகம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் சன்னரக அரிசியை கிலோ ₹30-க்கு விற்பனை செய்யும் திட்டம் இன்று (அக்டோபர் 17) தொடங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ் ஆகியோர் அரிசி விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் 30 அங்காடிகளில் விற்பனை

முதற்கட்டமாகச் சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடிகள் மற்றும் 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் சன்னரக அரிசி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்தத் திட்டம் நாளை முதல் படிப்படியாகத் தொடங்கப்பட உள்ளது.

ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 5 கிலோ

சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாகத் தமிழகம் முழுவதும் 25,000 மெட்ரிக் டன் அரிசியை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காகக் கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் என மொத்தம் 250 அங்காடிகள் மூலம் கிலோ ₹30 என்ற விலையில் அரிசி விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தனியார் அரிசி ஆலைகள் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் அரிசியைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறைந்த விலையில் சன்னரக அரிசி கிடைப்பதை உறுதி செய்வதுடன், சந்தையில் அரிசி விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply