தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு இணையவழி குலுக்கல்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குடியிருப்புத் திட்டங்களில், விற்பனைக்குரிய குடியிருப்பு அலகுகளை பொதுமக்களுக்கு இணையவழி மூலம் குலுக்கல் (Lottery) முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 21.08.2026 முதல் 26.09.2026 வரை நடைபெறும் வகையில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தத் திட்டங்களுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அதிக அளவில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, குடியிருப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்கு மேலும் 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை விண்ணப்பிக்காத பொதுமக்களும், தகுதியுடைய விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். குடியிருப்புகளுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://tnhb.tn.gov.in

மேலும், விண்ணப்பம் தொடர்பான தகுதி, திட்ட விவரங்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் பிற நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply