சுற்றுச்சூழல் விதிமீறல்: 467 தொழிற்சாலைகள் மீது அதிரடி நடவடிக்கை!
மூடல் மற்றும் மின் இணைப்புத் துண்டிப்பு உத்தரவு – கடந்த 5 மாதங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
சென்னை – அக்டோபர் 30: சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஐந்து மாதங்களில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய 467 தொழிற்சாலைகளுக்கு மூடல் மற்றும் மின் இணைப்பைத் துண்டிப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் சட்டப்பூர்வத் தேவைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள், உரிய இசைவாணை பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வெ.க. ராஜீவ் மேற்கொண்ட ஆய்வு மற்றும் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில், விதிமீறலில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஐந்து மாதங்களில் மொத்தம் 467 தொழிற்சாலைகளுக்கு மூடல் மற்றும் மின் இணைப்புத் துண்டிப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எத்தகைய விதிமீறல்களுக்கு நடவடிக்கை?
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றுதல், உரிய இசைவாணை பெறாமல் தொழிற்சாலைகளை இயக்குதல், நிர்ணயிக்கப்பட்ட புகை வெளியேற்ற அளவுகளைப் பின்பற்றாமல் செயல்படுதல், கழிவுநீர் வெளியேற்றத் தரநிலைகளை மீறுதல் உள்ளிட்டவை முக்கிய விதிமீறல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ நிபந்தனைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காற்று, நீர் மற்றும் நிலத்தின் தரம் பாதிக்கப்படுவதைத் தடுப்பது, மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது, பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மாநிலத்தின் நிலையான தொழில் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில், தொடர்ந்து ஆய்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், விதிமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது உரிய அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்