விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்! 21 கூடுதல் உலர்களங்கள் அமைக்க கருத்துரு அனுப்பியுள்ளதாக ஆட்சியர் தகவல்!

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்

கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் டிராக்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், தேவையான இடங்களில் உலர்களங்கள் அமைக்க வேண்டும், உரங்களை உரிய பருவத்திற்குள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தரணி சர்க்கரை ஆலையிலிருந்து 2018-19ஆம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகையைப் பெற்றுத்தர வேண்டும், தென்னை விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும், கண்மாய்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

21 கூடுதல் உலர்களங்கள் அமைக்க கருத்துரு

இதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்திற்கு கூடுதலாக 21 உலர்களங்கள் அமைக்கக் கோரி, சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட இயக்குநரகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒதுக்கீடு கிடைத்ததும் முன்னுரிமை அடிப்படையில் உலர்களங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தரணி சர்க்கரை ஆலையிலிருந்து 2018-19ஆம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகையைப் பெற்றுத்தருவது தொடர்பாக ஆலை நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாயத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும் பயிர்க்கடன் விவரங்களை அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கவும், கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயம் தொடர்பான தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

தென்னை மகசூலை அதிகரிக்கத் தென்னை டானிக், வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் மற்றும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடிக்கான மானியம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பயனடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், கண்மாய்கள் மற்றும் குளங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரவும் மாவட்ட நிர்வாகம் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்பு

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சசிகலா, வேளாண்மை இணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருப்பதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அ. அம்சவேணி, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் இந்திரா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் அ. ஆறுமுகம், வேளாண்மைத் துணை இயக்குநர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) வளர்மதி, அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply