தவெக–காங்கிரஸ் கூட்டணியை உடைக்க சதி..! தோல்வியடையும் என மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம்–காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த சில பத்திரிகையாளர்களும், சில ஊடகக் குழுமங்களும் முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக–காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதனை உடைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் தங்களை சந்தித்ததாக தெரிவித்த மாணிக்கம் தாகூர், தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி கூட்டணி கட்சிகளின் 2-வது கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார்.
செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு தவெக அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். முதல் கூட்டம் கோவளத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் சூட்டுவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
“இந்த கூட்டணி மதச்சார்பற்ற சமூகநீதி அடிப்படையில் வலுவான கூட்டணியாக அமைய வேண்டும். தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் ஒருமித்த கருத்தை உருவாக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும்” என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக முதல்வராக விஜய் தொடர வேண்டும் என்றும், தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் தற்போது நிறைவேற்றத் தொடங்கியுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான காங்கிரஸ் நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எழும் விவாதங்களுக்கு மத்தியில், விஜய் தலைமையிலான தமிழக அரசியல் கூட்டணி வலுவாக தொடர்ந்து செயல்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தவெக–காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு மத்தியில், செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்