திண்டிவனம் அருகே இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய தவெகவினர்! 20 குடும்பங்களுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வழங்கி நெகிழ்ச்சி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே முத்தாம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் தீபாவளி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

20 குடும்பங்களுடன் தீபாவளிக் கொண்டாட்டம்

விழுப்புரம் வடகிழக்கு மாவட்டம், மரக்காணம் மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட, திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே முன்னூர் ஊராட்சியில் அமைந்துள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் சுமார் 20 இருளர் இனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதி மக்களின் நிலையை அறிந்த 300-வது கிளைக் கழக நிர்வாகிகள் சேகர் மற்றும் அறிவழகன் ஆகியோர், இந்த ஆண்டு தீபாவளியை அவர்களுடன் கொண்டாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

மரக்காணம் மத்திய ஒன்றியச் செயலாளர் தினேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் வடகிழக்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அப்போது, 20 குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

அடிப்படை வசதிகள் கோரி கண்ணீருடன் மனு

நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள், தங்களது நீண்டகால அடிப்படை வசதிக் குறைபாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர் சக்திவேலிடம் எடுத்துரைத்தனர்.

தங்கள் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த ஆட்சியில் 9 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும், அந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், முறையான குடியிருப்பு வசதி, மின்சாரம் மற்றும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சுடுகாடு வசதி கூட இல்லை என வேதனையுடன் கோரிக்கை வைத்தனர்.

வீடு, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் பெற்றுத்தர உறுதி

மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்டச் செயலாளர் சக்திவேல், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் ‘வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின்’ கீழ், அப்பகுதி மக்களுக்கு வீடுகள் பெற்றுத்தர வழிவகை செய்வதாக உறுதியளித்தார்.

மேலும், மின்சார வசதி, சுடுகாடு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிகமாகக் கூரை அல்லது தார்ப்பாய் உள்ளிட்ட உதவிகள் தேவைப்பட்டாலும் தன்னைத் தொடர்புகொள்ளலாம் என்றும் உறுதியளித்தார்.

“இந்த ஆண்டுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி!”

புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகளைப் பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள், தங்கள் வாழ்நாளில் இதுபோன்ற தீபாவளியைக் கொண்டாடியதில்லை என்றும், தங்களைத் தேடி வந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தவெகவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் இருளர் இன மக்களைத் தேடிச் சென்று அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply