சீரழிந்த சட்டம்-ஒழுங்கை சீரமைக்கும் முதல்வர்! – தவெக ஐடி விங் பெருமிதம்.

சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தெரிவித்துள்ளது.

தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் தலைநகரில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்திருந்ததாகவும், தற்போதைய அரசு பதவியேற்ற நாள் முதலே அதனை சீரமைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, பெண்களுக்கான சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட தனிப்பிரிவுகளை செயல்படுத்துவதுடன், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.

குற்றங்கள் நடைபெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பதிவில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் காவல்துறை மூலம் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றங்களை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை காப்பதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் எந்தவித சமரசமும் இல்லை என்ற உறுதியுடன் முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் தவெக ஐடி விங் தனது பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தலைநகரில் குற்றவாளிகளுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படுமா என்பது பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply