உத்தமபாளையம் – கம்பம் சாலையில் விபத்துகளைத் தடுக்க பிரதிபலிப்பான்கள், எச்சரிக்கைப் பலகைகள் அமைப்பு!.

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் கம்பம் வரையிலான சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலையின் இருபுறங்களிலும் எச்சரிக்கைப் பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு ஊருக்கும் இடையிலான தூரத்தைக் குறிக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் பார்வையில் தெளிவாகத் தெரியும் இடங்களில் அறிவிப்புப் பலகைகள் மற்றும் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது எளிதில் அடையாளம் காண முடியாத இடங்களிலும், விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை மேற்கொள்ள கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை ஆய்வு செய்த அவர், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரைப் பாராட்டினார்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கைகள், இரவு நேரப் பயணங்களின்போது வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், விபத்துகளைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply