வாணியம்பாடியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரம்! பேருந்து நிழற்குடை முதல் பள்ளி, மருத்துவமனை வரை ஆட்சியர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.11 லட்சத்தில் பேருந்து நிழற்குடை
வளையாம்பட்டு பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிழற்குடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமானப் பணிகளின் தரம், கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து, நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
குழந்தை திருமணத்தைத் தடுப்பது, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆசிரியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், 14 வயது பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி தொடர்பாக மாணவிகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
நாற்றங்கால் பண்ணை, மண்புழு உரக்கூடம் ஆய்வு
கொத்தக்கோட்டை ஊராட்சியில் ரூ.8.38 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வட்டார நாற்றங்கால் பண்ணையையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மண்புழு உரக்கூடத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
TNCSC கிடங்கிலும் ஆய்வு
வாணியம்பாடி வட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கிலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் TNCSC கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், மகராசி, ஒன்றிய பொறியாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழக வெற்றிக்குரல்