14 ஆண்டுகளாக தொடரும் மதுக்கடை எதிர்ப்பு: கிராம சபையை புறக்கணித்த பெரியகுரும்பத்தெரு மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியகுரும்பத்தெரு ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை பல்வேறு புகார்கள் மற்றும் மனுக்களை கிராம மக்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மதுபானக் கடையை இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் பலமுறை உறுதியளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அரசு மதுபானக் கடையை அகற்றும் வரை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், திட்டமிட்டபடி கிராம சபைக் கூட்டத்தை நடத்த முடியாமல் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
14 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கை
பின்னர், கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த 14 ஆண்டுகளாக மதுபானக் கடையை அகற்றக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுரும்பத்தெரு கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்