வாணியம்பாடியில் சாலையோரம் குவிந்த குப்பைகள்: பொதுமக்கள் கடும் அவதி; உடனடி நடவடிக்கை கோரிக்கை.
திருப்பத்தூர், செப். 22:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி காம்பவுண்ட் அருகே சாலையோரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகள் சாலை முழுவதும் பரவி காணப்படுவதால், அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்லக்கூட போதிய வழியில்லாத அளவுக்கு குப்பைகள் குவிந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், குப்பைகள் முழுமையாக அகற்றப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அன்றாடம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, சாலையோரத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி, அப்பகுதியை தூய்மையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்