வாணியம்பாடியில் களைகட்டிய விநாயகர் சிலை ஊர்வலம்! மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் திரண்ட பக்தர்கள்!
வாணியம்பாடி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இந்து முன்னணி சார்பில் அம்பூர்பேட்டை ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ஒன்று திரட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வாணியம்பாடி திமுக நகர செயலாளர் வி.எஸ். சாரதிகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க, இளைஞர்கள் நடனமாடியபடி விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று, இறுதியாக பள்ளிப்பட்டு ஏரியை சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அணில் அக்ஷய் அனில் வாகரே தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக்குரல்