ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் விபச்சாரம்? வத்தலகுண்டில் போலீசார் திடீர் சோதனை – 2 பெண்கள் மீட்பு; 3 பேர் மீது வழக்கு.
வத்தலகுண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தலகுண்டு திருநகர் எதிரே, அரசு பேருந்து பணிமனைக்கு பின்புறம் சுதா என்பவர் நடத்தி வந்ததாகக் கூறப்படும் ஆயுர்வேத நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் திடீர் சோதனை
இதையடுத்து, நிலக்கோட்டை டி.எஸ்.பி. இளஞ்செழியன் மேற்பார்வையில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ஆயுர்வேத நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசார் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள் மீட்பு
இதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த இரண்டு பெண்களை போலீசார் மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்குப்பதிவு
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறி, சுதா, கோபி உள்ளிட்ட மூன்று பேர் மீது வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்