அக்டோபர் 2 முதல் “வெற்றிப் பயணம்” திட்டம்: முதல்வர் ஆய்வு!

எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் உள்ளிட்ட பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லை – ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவினம்

சென்னை – செப்டம்பர் 21: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில், “வெற்றிப் பயணம்” திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று (செப்டம்பர் 21) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் “வெற்றிப் பயணம்” திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயண வசதி குறிப்பிட்ட வகை சாதாரண நகரப் பேருந்துகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதல் வகை அரசுப் பேருந்துகளிலும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது. மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் மொஃபஸில் (புறநகர்) சாதாரணக் கட்டணப் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெற்றிப் பயணம்” திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான பேருந்து ஏற்பாடுகள், போக்குவரத்துத் துறையின் தயார்நிலை மற்றும் தொடர்புடைய துறைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் தலைமையிலான இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

திட்டம் நடைமுறைக்கு வரும் நிலையில், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான கட்டணமில்லா பயண வசதி நகர்ப்புறப் பேருந்துகள் மட்டுமின்றி, கூடுதல் சேவை வகைகள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான குறிப்பிட்ட சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவடைய உள்ளது.

Leave a Reply