மீன்பிடி துறைமுகம் அமைக்கக் கோரி 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்..! ஒரு வாரம் அவகாசம் – மீண்டும் போராட்டம் என எச்சரிக்கை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி, அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 3 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஒரு வார கால அவகாசம் வழங்கி போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
19 மீனவ கிராமங்கள்; துறைமுகம் இல்லாத அவலம்
விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் மாவட்டத்தில் இதுவரை மீன்பிடி துறைமுகம் இல்லாததால், பருவமழை மற்றும் புயல் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலை உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் சீற்றம் காரணமாக ஆண்டுதோறும் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் அடித்துச் செல்லப்படுவதுடன், கடலில் நங்கூரமிடப்படும் விசைப்படகுகளும் மூழ்கி சேதமடைவதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத் தடையால் கிடப்பில் போன துறைமுகத் திட்டம்
மீனவர்களின் நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து, சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட முட்டுக்காடு முதல் தாழங்காடு வரையிலான பக்கிங்காம் கால்வாய் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட பணிகளும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தால் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டதாகவும், இதனால் துறைமுகப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மீன்பிடி துறைமுகம் கோரி தொடர் போராட்டம்
இந்த நிலையில், அனுமந்தை குப்பம், செட்டிநகர் குப்பம், பனிச்சமேடு குப்பம் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக அனுமந்தை குப்பத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், அதிகாரிகள் உறுதி அளிப்பதைத் தவிர இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
ECR சாலையோரத்தில் உண்ணாவிரதம்
இதனை கண்டித்து 3 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் இன்று காலை 8 மணி முதல் அனுமந்தை ஈ.சி.ஆர். சாலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களது கோரிக்கைக்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் – மீனவர்கள்
இதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. ரூபன் குமார், திண்டிவனம் சார்-ஆட்சியர் ஆகாஷ், மரக்காணம் தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, துறை சார்ந்த அமைச்சர்கள் நேரில் வந்து தங்கள் பகுதியை ஆய்வு செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஒரு வாரம் அவகாசம்
இதற்கு அதிகாரிகள், தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் அமைச்சர்கள் உடனடியாக நேரில் வர முடியாது என்றும், விரைவில் அமைச்சர்கள் நேரில் வந்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்தனர்.
அதற்குள் அமைச்சர் நேரில் வந்து தங்களது கோரிக்கை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துவிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.
மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே 3 கிராம மீனவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்