பிறந்தநாள் பேனர் வைக்கச் சென்ற இடத்தில் சோகம்! உயர்மின் அழுத்த கம்பியில் உரசிய பேனர் – இளைஞர் பலி.

விழுப்புரம் கே.கே. சாலையில் பிறந்தநாள் விழாவிற்காக பேனர் வைக்கச் சென்றபோது, ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி பேனரை அகற்ற முயன்றபோது உயர்மின் அழுத்த கம்பியில் பேனர் உரசியதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த கரன் என்பவரின் மகன் மித்தரனின் பிறந்தநாள் விழா இன்று கே.கே. சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி, பிறந்தநாள் பேனர் வைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (28), கரன், பூவரசன், வாஞ்சிநாதன் ஆகிய நான்கு பேர் கே.கே. சாலைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை அவர்கள் அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அகற்றப்பட்ட பேனர் அருகில் சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில் திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் நான்கு பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த கரன், பூவரசன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகிய மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பிறந்தநாள் விழாவிற்காக பேனர் வைக்கச் சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply