பழனி கோயில் நகைகள் மாயம்..! நேரில் விசாரணை நடத்திய எஸ்.பி.
பழனி:
பழனி அருள்மிகு இடும்பன் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களில் சுமார் 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் வெள்ளி வேல் மாயமான வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயில்களாக அருள்மிகு இடும்பன் திருக்கோயிலும், அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலும் செயல்பட்டு வருகின்றன. இக்கோயில்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் வெள்ளி வேல் மாயமான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற வழக்கமான ஆய்வின்போது, கோயில் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
அதேபோல், ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 35 கிராம் தங்க ஆரம், 31 கிராம் தங்க நெக்லஸ், 19 கிராம் தங்க அட்டிகை மற்றும் 57 கிராம் தங்க செவ்வந்திப்பூ மாலை உள்ளிட்ட தங்க நகைகளும் மாயமாகியிருப்பது கண்டறியப்பட்டது. இவற்றின் மொத்த எடை சுமார் 142 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சாவிகள் அப்போதைய செயல் அலுவலர் விமலாவின் பொறுப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பழனி நகர காவல் நிலையத்தில் Crime No.456/2026 என வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக் கூறி பரம்பரை அறங்காவலர் ஏ.ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தற்போது நேரடியாக விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பழனி இடும்பன் திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் சென்ற எஸ்.பி. ஜெயக்குமார், நகைகள் மாயமானதாக கூறப்படும் பாதுகாப்பு அறை, லாக்கர் பெட்டகங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தார்.
மேலும், சாவிகள் பராமரிக்கப்பட்ட விதம், பதிவேடுகள், நகைகள் வைக்கப்பட்டிருந்த நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்போது பணியில் இருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக நீடித்து வரும் இந்த வழக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணையில் இறங்கியுள்ளதால், மாயமான கோயில் நகைகள் தொடர்பான மர்மத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்