பழனி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் தீவிர ஆய்வு – தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கான ஏற்பாடுகள்

பழனி:

தமிழக முதல்வர் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ‘முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்க உள்ள நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

MRI ஸ்கேன் மையம் அமைக்க கோரிக்கை

முன்னதாக, பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற வங்கி கடன் மேளாவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர் பழனி அரசு மருத்துவமனைக்கு அவர் வருகை தந்தார்.

அப்போது, பொதுமக்கள் சார்பில் பழனி அரசு மருத்துவமனையில் MRI ஸ்கேன் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் MRI ஸ்கேன் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆய்வு

தொடர்ந்து, தமிழக அரசின் ‘முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு அறைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மகப்பேறு வார்டுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

புதிய கட்டிடப் பணிகளும் ஆய்வு

மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டிடங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது, புதிய கட்டிடங்களில் லிஃப்ட் வசதிகள் இன்னும் அமைக்கப்படாததால், மேல் தளங்கள் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, லிஃப்ட் அமைக்கும் பணிகளை உடனடியாக விரைவுபடுத்தி, புதிய கட்டிடங்களை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply