சின்னாளப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை திருட்டு! கணவன்–மனைவி உட்பட 3 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற வழக்கில் கணவன்–மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னாளப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி (48) என்பவரது வீட்டின் பூட்டை கடந்த மாதம் 28ஆம் தேதி மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா மேற்பார்வையில், சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சத்யா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
விசாரணையின் அடிப்படையில், பேகம்பூர் அசனாத்புரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற ஆட்டு இஸ்மாயில் (46), அவரது மனைவி ரம்ஜான் (37) மற்றும் மதுரை செல்லூரைச் சேர்ந்த மணிவாசன் (46) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சின்னாளப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவத்தில் விரைந்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்