திருவிடைக்கழி முருகன் கோவிலில் சிறப்பு யாகம், பூஜை: வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருவிடைக்கழி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருவிடைக்கழி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு யாகம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் சுவாமி வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளுக்கு இணையான சிறப்புமிக்க திருத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் இக்கோவிலில், சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே சன்னதியில் அமைந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமான் கம்பீரமாக எழுந்தருளி காட்சியளிக்க, அவருக்குப் பின்புறம் சிவபெருமான் அருள்பாலிக்கும் வகையில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும், திருக்குராவடி அமைந்துள்ள சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.
கும்பாபிஷேகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் வீதி உலா
இரவு நடைபெற்ற வீதி உலாவையொட்டி விநாயகர், அம்பாள், சந்திரசேகர், சோமாஸ்கந்தர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைக்கு பின்னர் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
கோவில் அறங்காவலர் ஜெயராமன் முன்னிலையில், கோவில் குருக்கள் நந்தகுமார் குருக்கள் மற்றும் ராஜேஷ் குருக்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
தமிழக வெற்றிக்குரல்