கிளியனூரில் மதவெறுப்பு பேச்சு புகார் – நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமிய அமைப்பினர் மனு.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிளியனூர் கிராமத்தில் மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் பல்வேறு ஜமாத்துகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்தனர்.
கிளியனூர் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலையில் கிளியனூர்-அகரவள்ளம் பகுதியைச் சேர்ந்த கதிரவேலின் மகன் சந்திரசேகரன் என்பவர் தொடர்ந்து மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றில், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதாகவும், மேலும் மசூதிகள் மற்றும் முஸ்லிம்களின் வீடுகள் குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்ததாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், அதனை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்காக வழங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கிளியனூர் பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறப்படும் சந்திரசேகரன் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, புகார் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக மனுதாரர்கள் கூறினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பின் பொறுப்பாளர் சாதிக், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் தரப்பு விளக்கம் மற்றும் காவல்துறையின் அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் பட்சத்திலேயே புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரம் முழுமையாக தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்