ஏழை குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக காய்கறி கடை! சமூக சேவகரின் உதவியால் நெகிழ்ந்த குடும்பம்.
மயிலாடுதுறை அருகே ஏழ்மை நிலையில் வசித்து வந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக சமூக சேவகர் ஒருவர் காய்கறி கடை அமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவாரூர் செல்லும் சாலை அகரக்கீரங்குடி மஞ்சவாய்க்கால் மெயின் ரோட்டில் வசித்து வரும் துர்கா தேவி குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி மோகன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சமூக சேவகர் பாரதி மோகன் காய்கறி கடை அமைத்துக் கொடுத்தார்.
இதற்கான திறப்பு விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து கடையில் காய்கறி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைக்கு வந்து மலிவு விலையில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
சமூக சேவகர் பாரதி மோகன், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்குதல், வாழ்வாதாரம் இல்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல், கடைகள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
மேலும், சாலையோரங்களில் ஆதரவின்றி வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, புதிய ஆடைகள் வழங்கி, அவர்களை காப்பகங்களில் சேர்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அகரக்கீரங்குடியில் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் காய்கறி கடை அமைத்துக் கொடுக்கப்பட்டதால், அந்த குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்து சமூக சேவகருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்