மூன்று கண்கள், பத்து கைகளுடன் விஸ்வரூப காட்சி! அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் திரண்ட பக்தர்கள்.
மயிலாடுதுறை, செப்.19:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன.
இக்கோவிலில் தனி சன்னதியில் மூன்று கண்கள், பத்து கைகளுடன் சிறப்பு அவதாரத்தில் அருள்பாலிக்கும் திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு விஸ்வரூப காட்சியளித்து வருகிறார்.
அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
ஆஞ்சநேயரை சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள், சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு பால், தேன், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் விஸ்வரூப காட்சி
சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து, மூன்று கண்கள், பத்து கைகள் மற்றும் கருடாழ்வார் இறக்கைகளுடன் கூடிய சிறப்பு அவதார அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு விஸ்வரூப காட்சியளித்தார்.
பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
அன்னதானம்
சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாச்சாரியார் மாதவன் பட்டாச்சாரியார் மேற்கொண்டார். என்.என். சாவடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் குடும்பத்தினர் சிறப்பு பூஜைகளுக்கு உபயம் செய்திருந்தனர்.
விழாவையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனால் அனந்தமங்கலம் பகுதி முழுவதும் பக்தி நிறைந்த சூழல் நிலவியது.
தமிழக வெற்றிக்குரல்