கொடைக்கானல் பெருமாள் மலையில் பிரம்மாண்ட திருவிழா: 10 நாட்கள் பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்ரீ லட்சுமண பெருமாள் பிரம்மோற்சவம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், அடுக்கன் கிராமம் பெருமாள் மலையில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமண பெருமாள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில், காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற விழாவில், தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீ லட்சுமண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முதல் ஐந்து நாட்களில் மோகினி அவதாரம், ஸ்ரீ நரசிம்ம அவதாரம், ஸ்ரீ நாராயணர் அவதாரம், ஸ்ரீ பரமபதநாதர் அலங்காரம் மற்றும் ஸ்ரீ ராமர் அலங்காரம் என பல்வேறு திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளினார். இந்த சிறப்பு அலங்காரங்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கஜ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளிய நிகழ்ச்சியும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமண பெருமாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை தொடர்ந்து, திருமணக் கோலத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமண பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குழந்தை வரம் வேண்டி வந்த தம்பதிகள் மற்றும் திருமணம் நடைபெற வேண்டி வழிபட்டவர்களும் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.

மேலும், பெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் அலங்காரத்தில் எழுந்தருளிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமண பெருமாளுக்கு மின் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, பக்தர்கள் பெருமாள் மலையின் உச்சிப் பகுதிக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீர்த்த நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இவ்வாறு சாமி சாட்டுதல், காப்பு கட்டுதல், கொடியேற்றம் தொடங்கி பல்வேறு வாகன சேவைகள், அலங்காரங்கள், திருக்கல்யாணம், வீதி உலா, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி, தீர்த்த நீராடல் என பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் பத்து நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவ விழா, கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது.

விழா முழுவதும் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமண பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply