தரங்கம்பாடியில் அக்டோபர் 1 முதல் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது கட்டாயம் – பேரூராட்சி செயல் அலுவலர் தகவல்.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் இராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தரங்கம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 6,025 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 25,125 மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுலா நகரமாக விளங்கும் தரங்கம்பாடிக்கு தினசரி 5,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக பேரூராட்சி பகுதியில் தினசரி சுமார் 6 டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளை பேரூராட்சி பணியாளர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து வருகின்றனர்.

சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள் வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. அதேபோல், விற்பனை செய்யக்கூடிய மக்காத கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படுகின்றன. மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு பேரூராட்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு குப்பைத் தொட்டிகளில் தரம் பிரிக்க வேண்டும்

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் பிரித்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாப்கின், மாஸ்க், டயபர் போன்ற கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும். பல்பு, ஒயர், பெயிண்ட் டப்பா உள்ளிட்ட சிறப்பு கவனத்திற்குரிய கழிவுப் பொருட்களை தனியாக சேகரித்து, ஒவ்வொரு புதன்கிழமையும் பேரூராட்சி வாகனம் வரும் போது வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை இரண்டு தனித்தனி குப்பைத் தொட்டிகளில் தரம் பிரித்து வழங்கினால் மட்டுமே பேரூராட்சி பணியாளர்களால் அவை சேகரிக்கப்படும் என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1 முதல் கட்டாயம்

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தரங்கம்பாடி பேரூராட்சியை தூய்மையான நகரமாக மாற்ற முடியும் என தெரிவித்துள்ள செயல் அலுவலர் இராஜா, அக்டோபர் 1ஆம் தேதி முதல் வீடுகளில் உருவாகும் அனைத்து திடக்கழிவுகளையும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என கட்டாயம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரூராட்சியின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply