கிராம சபையில் குவிந்த மக்கள் குறைகள்: குடிநீர், சாலை முதல் மது விற்பனை புகார் வரை…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட அருவாபாடி, கொற்கை, காளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

கொற்கை ஊராட்சியில் பொதுமக்கள் குறைகள்

கொற்கை ஊராட்சியில் ஊராட்சி எழுத்தாளர் மாலதி ஏற்பாட்டில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு குறைகள் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்து விவாதித்தனர்.

கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஊராட்சியின் கணக்குகள் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகளால் வாசித்து காட்டப்பட்டன.

காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து விவாதம்

காளி ஊராட்சியில் சமூக நலத்துறையைச் சேர்ந்த பராசக்தி, கிராம நிர்வாக அலுவலர் பஞ்சநாதன் மற்றும் காளி ஊராட்சி எழுத்தர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்குகளை முறையாக பராமரித்தல், அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் பயன்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபையில் எழுந்த மது விற்பனை குற்றச்சாட்டு

இதனிடையே, காளி அருகே செஞ்சி அரசு பள்ளி பகுதியில் உள்ள வாசன் நகரில் ஒரு வீட்டில் குடும்பமாக சேர்ந்து மது விற்பனை நடைபெறுவதாக கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் வாகனங்கள் வந்து செல்வதால், தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறும் அச்சுறுத்தலும் ஏற்படுவதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம சபைக் கூட்டம் என்பது உள்ளூர் மக்களின் தேவைகள், குறைகள் மற்றும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரடியாக விவாதிக்கும் முக்கியமான தளமாக உள்ள நிலையில், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply