வடமதுரை அருகே கோர விபத்து! சாலையோரம் விளையாடிய 4 குழந்தைகள் பலி – பால் வேன் டிரைவர் கைது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மீது பால் ஏற்றிச் சென்ற 407 வேன் மோதியதில், நான்கு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரம் விளையாடிய குழந்தைகள்

வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதியில் இன்று பிற்பகல் பழனிச்சாமி என்பவரது மனைவி அஞ்சம்மாள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவருடன் சென்றிருந்த உறவினர்களின் குழந்தைகள் சாலையோரத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அவ்வழியாக பால் ஏற்றிச் சென்ற 407 வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலி

இந்த கோர விபத்தில் யோகவர்ஷினி, அனன்யா, தனுஸ்ரீ மற்றும் மோசிகரன் ஆகிய நான்கு குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த குழந்தைகளில் யோகவர்ஷினிக்கு 11 வயதும், அவரது தங்கை அனன்யாவுக்கு 6 வயதும், தனுஸ்ரீக்கு 5 வயதும், மோசிகரனுக்கு 6 வயதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு தப்பிய பால் வேன்

விபத்தை ஏற்படுத்திய பால் வேன் அங்கு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேன் பறிமுதல் – டிரைவர் கைது

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய பால் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் வேன் ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பிஞ்சுக் குழந்தைகள் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் கொல்லப்பட்டி சமத்துவபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply