பழனி சித்தி விநாயகர் கோயிலில் 108 சங்கு பூஜை – உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு!
பழனி, செப். 2:
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில், மகா ஆவணி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உலக மக்கள் நலன் வேண்டி 108 சங்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.
சண்முகபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
விழாவையொட்டி மூலவர் சித்தி விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண மலர்களால் விநாயகர் பெருமான் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற வழிபாட்டில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
உலக மக்கள் நலனுக்காக 108 சங்கு பூஜை
உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும் 108 சங்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, புனித நீரால் மூலவர் சித்தி விநாயகர் பெருமானுக்கு மகா சங்காபிஷேகம் நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் லயன்ஸ் கிளப் மணிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர், செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பழனி நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் திரளாக பங்கேற்று சித்தி விநாயகர் பெருமானை தரிசனம் செய்தனர்.
108 சங்கு பூஜை மற்றும் மகா சங்காபிஷேகத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தி மயமாக காணப்பட்டது.
தமிழக வெற்றிக்குரல்