சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2-வது நாளாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ! – 50 ஏக்கருக்கு மேல் வனம் பாதிப்பு.
ஈரோடு, செப். 2:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் வன வேட்டைத் தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடம்பூர் மலைப்பகுதியில் திடீரென பற்றிய தீ
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும், அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் பல்வேறு தாவர வகைகளும் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இந்த நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கம்பத்துராயன் கிரி வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி, வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் உள்ளிட்டவை கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றன.
இரவு நேரத்தால் தீயை அணைப்பதில் சிக்கல்
காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வனத்துறையினர் மற்றும் வன வேட்டைத் தடுப்பு காவலர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், தற்போது 50 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியூர், பவளக்குட்டை பகுதிகளுக்கும் தீ பரவல்
2-வது நாளாக தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீயின் வேகம் மற்றும் வனப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாக தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தற்போது காட்டுத்தீ அத்தியூர், பவளக்குட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடம்பூர், கேர்மாளம் வனச்சரகங்களுக்கு தீ பரவாமல் கண்காணிப்பு
காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தீ கடம்பூர் மற்றும் கேர்மாளம் வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்டுத்தீ காரணமாக வன உயிரினங்களுக்கும், அரிய மரங்கள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், தீயை விரைந்து கட்டுப்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்