வடமதுரை அருகே சட்டவிரோதமாக எம்-சாண்ட் கடத்தல்: 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்!

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே போதிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக எம்-சாண்ட் (M-Sand) கொண்டு சென்றதாக 3 டிப்பர் லாரிகளை கனிமவளத் துறையினர் பறிமுதல் செய்தனர். வடமதுரை அருகே கொசவபட்டி சாலை பகுதியில் கனிமவளத் துறை அதிகாரி ஆஞ்சலோ மெர்சி தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். இதையடுத்து, லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

ஆவணங்களின்றி எம்-சாண்ட் கொண்டு சென்றது அம்பலம்

இதைத்தொடர்ந்து, கனிமவளத் துறையினர் லாரிகளைச் சோதனை செய்தனர். அப்போது, போதிய ஆவணங்களின்றி எம்-சாண்ட் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply