இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாகப் புகார்: பெண் காவலரின் கணவர் கைது!
செம்பட்டி போலீசார் நடவடிக்கை – பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் தொல்லை கொடுத்ததாகப் புகார்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த 30 வயது இளம் பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பதிவிட்டு தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெண் காவலரின் கணவரை செம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
செம்பட்டி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ்கண்ணனின் மகன் மாயழகன் என்பவர், இளம் பெண்ணின் குடும்பத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவரை அவமதிக்கும் வகையிலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெயர் மற்றும் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்துப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண், மாயழகன் மீது செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுக நயினார், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாயழகனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாயழகன், திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக்குரல்