மயிலாடுதுறையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்!
மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி, ஆகாயத்தாமரை உள்ளிட்ட தடைகளை அகற்ற அமைச்சர் வெங்கட்ராமன் அறிவுறுத்தல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எச். எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மழைநீர் வடிகால்களைத் தூர்வார உத்தரவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்றும், ஆகாயத்தாமரை உள்ளிட்ட தடைகளை அகற்றி மழைநீர் தடையின்றி வெளியேறுவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பேரிடர்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டு, புயல், கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்தவிதமான பேரிடர் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை
பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளித்து, பொருட்சேதங்களைக் குறைப்பதற்கும், பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் மக்களைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கும் அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்குரல்