சேத்துப்பட்டு அருகே திறந்த நிலையில் ஆபத்தான பள்ளம்! உயிர்ச் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், தச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அரிச்சந்திர நகர் பகுதியில், தொட்டி அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை முறையாக மூடப்படாமல் தண்ணீர் தேங்கிய நிலையில் ஆபத்தானதாகக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் அதன் ஆழம் தெரியாமல், யாரேனும் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொட்டி அமைக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தால், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் உள்ள பள்ளத்தை மண்ணால் மூடி, அப்பகுதியைப் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்ச் சேதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை அவசியம்! பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆபத்தான பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக வெற்றிக்குரல்