கிருஷ்ணர்–ராதை வேடத்தில் குட்டீஸ் கலக்கல்..! பழனியில் கோலாகலமாக நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா
பழனி:
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழனி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் அருகே உள்ள தேரடி திடலில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருமடங்கள் மற்றும் திருக்கோயில்கள் பாதுகாப்புக் குழு மாநில அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
கோபூஜையுடன் தொடங்கிய விழா
விழாவையொட்டி முன்னதாக புனித கோபூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கியது.
இதையடுத்து பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து விழாவில் பங்கேற்றனர்.
கிருஷ்ணர், ராதை வேடத்தில் குழந்தைகள்
வண்ணமயமான ஆடைகள் அணிந்து, கிருஷ்ணரைப் போன்று மயில் இறகு மற்றும் புல்லாங்குழலுடன் சிறுவர்களும், ராதை வேடத்தில் சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களில் அலங்கரிக்கப்பட்ட மழலைகளின் அழகிய தோற்றமும், அவர்களின் அணிவகுப்பும் விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட கிருஷ்ணன், ராதை தேர்வு
விழாவில் வேடமணிந்து பங்கேற்ற அனைத்து குழந்தைகளின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன. பின்னர் குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட கிருஷ்ணர் மற்றும் அதிர்ஷ்ட ராதை தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்ட கிருஷ்ணனுக்கு ₹10,000 ரொக்கப் பரிசும், அதிர்ஷ்ட ராதைக்கு ₹5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பரிசுகளைப் பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உற்சாகமடைந்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
விழாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள், ஆன்மிக அன்பர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்ற இந்த நிகழ்வு, பழனி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
தமிழக வெற்றிக்குரல்