வாணியம்பாடியில் குடிநீர், தூய்மைப் பணிகள் பாதிப்பு! நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு சித்திகாபாத் பகுதியில் முறையான குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் கால்வாய் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வாரமாகக் குடிநீர் தட்டுப்பாடு; ஒரு மாதமாக அகற்றப்படாத குப்பைகள்!
சித்திகாபாத் பகுதியில் கடந்த ஒரு வாரமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்றும், கடந்த ஒரு மாதமாகக் குப்பைகள் அகற்றப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கழிவுநீர் கால்வாய்களில் மண் நிரம்பித் தூர்வாரப்படாமல் இருப்பதால் கழிவுநீர் வெளியேற வழியின்றிச் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள், வாணியம்பாடி–ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
சுகாதார அலுவலருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ரஹீம், பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, சாலை மறியல் முயற்சியைக் கைவிட்ட பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நகர போலீசாரும் சுகாதார அலுவலர் அப்துல் ரஹீமும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள், தங்கள் பகுதியின் பல்வேறு தெருக்களுக்கு அவரை அழைத்துச் சென்று குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய்களின் நிலை குறித்து விளக்கினர். இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகளைச் சீரமைக்கக் கோரிக்கை
மேலும், தங்கள் வார்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நகரமன்ற உறுப்பினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நேரில் வந்து குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற்ற பின்னர் அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் அலட்சியம் காட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, சித்திகாபாத் பகுதியில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு, நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழக வெற்றிக்குரல்