சேரானல்லூர் விபத்து வழக்கு: நீதிபதியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்!
கொச்சி: சேரானல்லூர் விபத்து வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவனின் தந்தையும், விபத்தில் தொடர்புடைய வாகனத்தின் உரிமையாளருமான கூடுதல் மாவட்ட நீதிபதியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அவரைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விசாரணைக்கு ஆஜராக நீதிபதிக்கு உத்தரவு
நீதிபதி விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், அவர் நீதித்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருவதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதேவேளையில், வழக்கின் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நீதிபதி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த உயிரிழந்தவரின் குடும்பம்
இந்த வழக்கில் உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர், நீதிபதி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வழக்கில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க நீதிபதி முயற்சிப்பதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
நீதிபதி உயர் பதவியில் இருப்பதால் நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், வழக்கிலிருந்து விடுபடப் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் ஜெயபாலகிருஷ்ணனின் உறவினர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்குரல்