தொப்பம்பட்டியில் தவெக 100 நாள் சாதனை விளக்கம்..! 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்!

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தொப்பம்பட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் முகமது அலி ஜின்னா ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளிகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு பட்டுப்புடவை, அரிசி உள்ளிட்ட நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், சுமார் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா, மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பழனி பாலன் ஆகியோர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய செயலாளர் முகமது அலி ஜின்னா, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விவசாயிகளின் நலன் மற்றும் விளைபொருட்களுக்கான விலை தொடர்பாக பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். தற்போதைய சூழலில் சில விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு திட்டங்களில் முறைகேடுகள் மற்றும் கமிஷன் தொடர்பான புகார்கள் இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி பாதிக்கப்பட்டதாகவும் விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முறைகேடாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் மூலம் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி செய்து, தங்களை கொடைவள்ளல்களாக காட்டிக்கொள்வதாகவும் முகமது அலி ஜின்னா விமர்சித்தார்.

தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சியில் பழனி நகர செயலாளர் மிதுன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் விஜய், நாகராஜ், இக்பால், தொப்பம்பட்டி நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply