பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்..! 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

பழனி:

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், வார விடுமுறை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கோயில் அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தற்போது ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மின் இழுவை ரயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மலைக்கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் நெரிசலின்றி சென்று வருவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஒருவழிப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கோயிலுக்குள் செல்லவும், தரிசனம் முடித்தவர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் திருக்கோயில் பாதுகாவலர்கள் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வார விடுமுறையையொட்டி பழனி மலைக்கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தால், அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை திருவிழா போன்ற சூழல் நிலவியது.

Leave a Reply