கலவை அருகே ஆற்று மணல் கடத்தல்! மாட்டு வண்டிகள் பறிமுதல்; மூன்று பேர் கைது!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே வாழைப்பந்தல் காவல் எல்லைக்குட்பட்ட கமலண்டநாக நதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நள்ளிரவில் போலீசார் ரோந்து
கமலண்டநாக நதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வாழைப்பந்தல் காவல் நிலைய ஆய்வாளர் மலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாழைப்பந்தல் காவல்துறையினர் நள்ளிரவில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேலப்பாந்தை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), முருகன் (60), அருண் (33) ஆகிய மூன்று பேர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூவரையும் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட மூவரும் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாழைப்பந்தல் காவல் எல்லைக்குட்பட்ட ஆரூர், பொன்னமங்கலம், சொறையூர், மேலப்பாந்தை, வாழைப்பந்தல் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்தலைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்