ரேஷன் கடையில் திடீர் ஆய்வு: பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்ட காஞ்சிபுரம் ஆட்சியர்!

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா, உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது நியாய விலை கடையில் பணியில் இருந்த ஊழியர்களிடம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உரிய அளவில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

மேலும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் எளிதாகவும் சிரமமின்றியும் கிடைக்கிறதா, பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் குறைகள் அல்லது பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் ரேஷன் கடையின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக நேரடியாக கருத்துகளையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

இதையடுத்து, உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் ராதா நடேசன், துணைத் தலைவர் பிரகாஷ், விசூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply