ரூபாய் நோட்டுகளால் ஜொலித்த ஏலேல விநாயகர்! காஞ்சிபுரத்தில் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரம்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏலேல விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பா நகர் சன்னதி முன்பு அமைந்துள்ள ஏலேல விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, விநாயகர் சிலை புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தது. குறிப்பாக ரூ.1, ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.200 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

மேலும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் தரிசனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏலேல விநாயகருக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இன்றும் நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தை காண காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, விநாயகரை பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அலங்கார நிகழ்வால் கோவில் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

Leave a Reply