13 ஆண்டுகளுக்குப் பிறகு பெருநகர் அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட பெருநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

விமான கும்பாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்வாக பிரதான கலசங்கள் ஆலயத்தைச் சுற்றி வலம் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து விமான கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம் மற்றும் அருள்மிகு அங்காளம்மன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்களுக்கு அன்னதானம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று அன்னதானத்தை பெற்றுக்கொண்டனர்.

சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அருள்மிகு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், அம்மன் திருவீதி உலா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனை முன்னிட்டு முக்கிய வீதிகளில் பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை வழிபட உள்ளனர்.

விழா ஏற்பாடுகள்

13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பருவத ராஜ குளத்தினர்கள் மற்றும் பெருநகர் கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாக மேற்கொண்டனர்.

கும்பாபிஷேக நிகழ்வுகளை சர்வசாதகம், சர்வ சாதக திலகம் சிவாஜி. N. பாலாஜி குருக்கள் தலைமையில் ஆகம முறைப்படி நடத்தி வைத்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, பெருநகர் பகுதி மக்களிடையே ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply